Tuesday, May 20, 2014

மேட் இன் இந்தியா

இந்த முறை இந்தியா பிரயாணத்திற்காக செக்கின் செய்து வெஜிடேரியன் மீல்ஸ் கன்ஃபர்ம் செய்த கையோடு சிப்பந்தியிடம் "அம்மாடி...இந்த தரம் நான் தனியா போறேன், அதுனால பக்கத்துல இளம் பெண்கள் யாருக்கும் சீட்ட போட்டுறாதீங்க" என்று கோரிக்கை வைத்தேன். கஸ்டமரே கண் கண்ட தெய்வம்ன்னு அவர்களும் ப்ளைட்டில் கால் கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் இளம் பெண்கள் யாரையும் போடவில்லை. முன்னால் உட்கார்ந்திருந்த வெள்ளக்கார தாத்தாவிற்கு அபான வாயு பிரச்சனை. அவரும் பிராயணம் முழுக்க கொடியசைந்ததும் காற்று வந்ததா, காற்று வந்ததும் கொடியசைந்ததான்னு பாட்டு பாடிக்கொண்டே வந்தார். ப்ளைட் முதலாளிகளெல்லாம் பிக்காலிப் பயல்களாகிக் கொண்டிருக்கிறார்கள். போன தடவையெல்லாம் ரேஸ்-2வில் தீபிகா படுகோனேவை பார்க்கவிடாமல் காப்பி வேணுமா சூஸ் வேணுமான்னு திரும்பத் திரும்ப படுத்துகோனேவாக இருந்த சிப்பந்திகள், இந்த முறை தண்ணீர் கேட்டாலே கதவைத் திறந்து கடலுக்குள் தள்ளிவிட்டு விடுவார்களோ என்றளவில் பயம் காட்டிக் கொண்டிருந்தார்கள். அது என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை, நான் அடிச்சுப் பிடிச்சு ஃப்ரீக்வெண்ட் ப்ளையரில் கொஞ்ச ஏர் மைல்ஸ் சேர்த்து வைத்தால் அந்த கம்பேனி திவாலாகிவிடுகிறது, அல்லது குபீர்ர்ர்ன்னு பெரும் கடனாளி ஆகிவிடுகிறது. கிங்பிஷரில் ஒரு ப்ரீ ப்ளைட் அளவிற்கு ஏர்மைல்ஸ் வைத்திருந்தேன். பிஸ்னஸ் க்ளாசிற்கு அப்கிரேட் செய்தால் செவப்பு சொக்கா போட்ட புள்ளங்க நாம தூங்கும் போது பாட்டு பாடி சுகமா தட்டிக் கொடுத்து ஜோ ஜோ பண்ணுவார்கள் என்று எவனோ கிளப்பிய புரளியை நம்பி இன்னும் ஒரு ஆயிரம் மைல் சேர்த்தா டபுள் ஜோ ஜோ தான்னு காத்திருந்தேன். மல்லையா கம்பியை நீட்டி விட்டார். ஸ்பைஸ் ஜெட் மற்றும் ஜெட் ஏர்வேஸ் பயமாக இருக்கிறது.

சென்னையில் அக்னிநட்சத்திர முஹூர்த்தம். இந்த முறையும் நிறைய பாடங்கள் கற்றுக் கொண்டேன். அடக்கம் அமரருள் என்பதெல்லாம் மனப்பாடம் செய்து ஒப்பித்து சின்ன ட்ராபியா பரிசு வாங்கத்தான் உதவும், மத்தபடி வாழ்வியலில் - `அடக்கம்` என்பது கண்ணம்மா பேட்டையில் செய்வது என்பது நன்றாக புரிந்தது. முதல் வாரத்திற்கு அப்புறம் "என் பேரு மாணிக்கம், எனக்கு பம்பாயில இன்னொரு பேரு இருக்கு" என்று மெதுவாக ஆரம்பித்தேன். சில இடங்களில் வொர்க் அவுட் ஆகி பம்மினார்கள். பல இடங்களில் "டேய் உனக்கு பம்பாயில அப்படி என்னடா பேரு"ன்னு எகிறினார்கள். மனிதருள் மாணிக்கம்தாங்க அந்தப் பெயர்ன்னு நானும் பதிலுக்கு பம்ம வேண்டியதாகிவிட்டது. இறங்கும் போதே SUV-ல் இறங்க வேண்டியிருக்கிறது. கேட்டால் கிடைக்கும் ஏன் ஆரம்பித்திருக்கிறார்கள் என்பது தெளிவாகப் புரிந்தது. சென்னை ஏதோ ஒரு புரியாத வேகத்தில் போய்க்கொண்டிருக்கிறது. Respect for Self and Respect for others போன்ற அடிப்படை விஷயங்கள் சேவை மையங்களில் தொலைந்து கொண்டிருக்கின்றன. மே ஐ ஹெல்ப் யூ என்பது செண்ட்ரலைஸ்ட் ஏசி கார்பரேட்டில் உதட்டளவில் சொல்லும் வாசகம் மட்டுமே. இந்தியா ஒரு நாள் ஃபாரின் மாதிரி இருக்கும் என்ற மெயில்கள் பார்த்திருக்கிறேன், விலைவாசி ஃபாரினையும் மிஞ்சிக் கொண்டிருக்கிறது - பெருமைப் பட வேண்டிய விஷயமா என்பது தெரியவில்லை. மோடிஜி வந்து ரூபாய்க்கு அம்பது டாலர் என்று ஆகிவிட்டால் இந்தியாவில் இருப்பவர்கள் எல்லாம் ப்ளைட் பிடித்து லண்டன் சரவண பவனுக்கு வந்து தான் சாம்பார் இட்லி சாப்பிட வேண்டியிருக்கும்.

ஆழ்வார்பேட்டை பூலோக கைலாசமாக இருக்கிறது. ஆண்டவனைத் தான் பார்க்க முடியவில்லை. ஏதோ பாட்டு ஷூட்டிங்கிற்கு டர்க்கிக்கு போயிருக்கிறார் என்றார்கள். ஆஞ்சநேயர் கோயிலில் சரவண பவனை விட நிறைய கேசரி கொடுக்கிறார்கள். வுட்லண்ட்ஸில் சாப்பாடுக்கு கூட்டம் நாயாய் காவல் காக்கிறது. அரை மணிநேரம் ஆகும் சார் என்று சொல்லி விட்டு அதான் சொன்னேல என்று ஒரு மணிநேரம் காக்க வைக்கிறார்கள். பக்கத்தில் ஒரு ஷெர்வானி கல்யாணம் நடந்து கொண்டிருந்தது. டோப்பாவெல்லாம் வைத்துக் கொண்டு ரசகுல்லா பரிமாறிக்கொண்டிருந்தார்கள். அங்கே புகுந்துவிடலாம் என்று எத்தனிக்கும் போது சார் டேபிள் ரெடி என்று கொத்திக் கொண்டு போய்விட்டார்கள். பீடா ஸ்டால்லாம் வேறு இருந்தது.


டி.வி.யில் வெள்ளைக்கார ஸ்த்ரீகள் சன்னமாய் வஸ்திரம் அணிந்து கொண்டு "எனக்கு இந்திய ஆம்பிளைகளைத் தான் ரொம்பப் பிடிக்கும் அவங்க தான் அம்மாவை பார்த்துப்பாங்க" என்று சம்பந்தமேயில்லாமல் உதட்டை மடித்து கிறங்கிக் கிறங்கி Boat Partyக்கு கூப்பிட்டுக் கொண்டே...இருந்தார்கள். Axe நிறுவனம் ஏற்பாடு போல. முத்தாய்ப்பாய் "Boat Partyக்கு அம்மாவை கூட்டிட்டு வந்துராதீங்க" என்று வேறு அந்தப் பெண் கண்ணடித்து வலியுறுத்திக்கொண்டிருந்தாள். தேதியைப் பார்த்தேன், ரிட்டர்ன் டிக்கெட்டிற்கு அப்புறம் என்று போட்டிருந்தது. ச்சை...சமூகத்தையும், கலாச்சாரத்தையும் கெடுக்க வந்த கோடாலிக் காம்புகள்.

சென்னையில் பதிவர் தினேஷ் புண்யத்தில் பதிவர்/பேஸ்புக்கர்/ட்விட்டர் - இதில் ஏதோ ஒரு மீட் ஒன்று ஏற்பாடாகியது. பாவம் தினேஷ் ரொம்பவே திணறிவிட்டார். ரொம்ப நேரம் நானும் அவரும் மட்டுமே பேசிக்கொண்டிருந்தோம். அப்புறம் ரமணா ஸ்டைலில் உங்களுக்கு மூனு சான்ஸ் தர்றேன் யார வேணா கூப்பிட்டுக்கோங்க என்று நான் மிரட்ட, முதலில் கே.என்.சிவராமனுக்கு போனைப் போட்டார். மனுஷன் செம உஷார், ஸ்விச்ட் ஆஃப். நம்பரை ப்ளாக் செய்து விட்டு அடுத்தது எறும்பு ராஜகோபாலுக்கு ஃபோனைப் போட பாவம் அவர் எடுத்து விட்டார். ஆனால் அவரும் அமிதாபச்சனை பார்க்க அமிஞ்சிக்கரை போய்க் கொண்டிருந்ததால் வர இயலவில்லை. மூன்றாவது கே.ஆர்.பிக்குப் போட பட்சி சிக்கிக்கிச்சு. அவரோடு மெட்ராஸ் பவன் சிவக்குமார் வர, அப்புறம் மெதுவாய் ஜாக்கி, கேபிள் சங்கர் என்று களை கட்டியது. வெட்டி அரட்டையாய் இல்லாமல் ப்ளாகை வைத்து மாசம் முப்பதாயிரம் ரூபாய் சம்பாதிப்பது எப்படி என்று கோடிட்டு காட்டினார்கள். அது இது எது என்று நிறைவாய் பேசி, மயிலை கற்பகாம்பாள் மெஸ்ஸில் வாழப்பூ அடை, வெங்காய அடை, ப்ளைன் அடை, கிச்சடி, பாம்பே பூரி, பாதாம் அலவா என ஒரு கட்டு கட்டினோம். எல்லோருக்குமான பில்லை கேபிள் சங்கர் கொடுத்தார்.