Saturday, November 23, 2013

இரண்டாம் உலகம்

படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடம் இந்த மாதிரி மேக்கிங்கை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று தோன்றியது

அனுஷ்கா ரசிகர்களுக்கும் ஆர்யா ரசிகைகளுக்கும் இந்த படத்தைப் பார்த்த பிறகு அவர்களைப் பிடிக்காமல் போவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கிறது. இரண்டாம் உலகில் ஆர்யாவிற்கு  ஷேவிங் செய்த காட்டுக் குரங்கு மாதிரி மேக்கப் வேறு -  சகிக்கலை.

இடைவேளையில் இடைவேளை என்று போடாமல் இரண்டாம் உலகம் என்று போடுகிறார்கள். இங்கே ஆங்கிலப் படங்களுக்கு இண்டர்வெல் கான்சப்ட் கிடையாது என்பதால் படம் அவ்வளவு தான் முடிந்துவிட்டது என்று நிறைய பேர்கள் குழம்பி ஒருத்தரை ஒருத்தர் பார்த்து திரு திருவென்று முழித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு கனவான் தியேட்டர் சிப்பந்திகளிடமே கன்பேர்ம் செய்து கொண்ட பிறகே குடும்பத்திற்கு பாப்கார்ன் வாங்கி வரப் போனார்.

அனுஷ்கா படம் முழுக்க வியாபித்திருக்கிறார். கொஞ்சம் சதை போட்டிருக்கோமோ என்று மனக் கவலையில் இருக்கும் பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் அனுஷ்கா தொப்பை அடிக்கடி படத்தில் காட்டப் படுகிறது. யோகா செய்து திரும்ப வராமல் இருந்தால் அனுஷ்கா ஆண்ட்டியாய் அப்கிரேட் ஆகிவிட்டார் என்றே தோன்றுகிறது.

படம் ஆரம்பித்து ஒரு மணி நேரத்தில் திரும்பவும் இந்த மாதிரி மேக்கிங்கை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று தோன்றியது

படம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் "சீக்கிரம் படத்த போடுங்கய்யா..." என்று கூவத் தொடங்குகிறோம். இடைவேளைக்கு அப்புறம் "சீக்கிரம் படத்த முடிங்கைய்யா..." என்று கூவுவதை மாற்றிக் கொள்கிறோம்.

அடிக்கடி காதல் என்றால் என்ன, எப்படி ஃபீல் பண்ணவேண்டும் என்று யாராவது ஒரு கதாபாத்திரம் விளக்கம் கொடுக்கிறார்கள். ஆஹா இந்த மாதிரி நிறைய ஃபாரின் ஆட்களை பஸ் ஸ்டாப்பில் முத்தம் குடுக்கவைத்து காதலை கே.டி.குஞ்சுமோன் டைரக்டர்கள் அல்ரெடி அக்கு வேறு ஆணி வேறாய் நிறைய பிரித்து மேய்ந்திருக்கிறார்களே என்று அப்போது தான் பல்பு  எரிந்தது.

"விந்தை உலகில்,....வேடிக்கை மனிதனின் அட்டகாசம்" என்று டீ.வியில் கட்டைக் குரலில் "இந்திய தொலைக்காட்சிகளில்..."  விளம்பரத்தில் வரும் டப்பிங் ஹாலிவுட் பட எஃபெக்ட் நிறையவே கிடைக்கிறது. இந்த படம் டீ.வியில் வரும் போது முக்காலே சதவீதம் கண்டிப்பாய் நீங்கள் டப்பிங் படம் என்று நினைத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

வசனங்கள் எல்லாம் படு திராபை. படத்தின் மிகப் பெரிய பலவீனமே ஸ்க்ரீன் ப்ளேயும் வசனங்களும் தான் என்பது எனது தனிப்பட்ட கருத்து. நிறைய இடங்களில் மக்கள் பொறுமையிழந்து "ஷப்பா...டேய்...டேய் .....போதும்டா சொறியாதடா" என்று சவுண்டு விட ஆரம்பித்துவிட்டார்கள். வசனம் மட்டும் இல்லாவிட்டால் இசைக்கு அந்த திராபை பட்டத்தை அளித்திருக்கலாம்.

A film by Selvaraavan என்று கார்டு போடும் போது காதல் கொண்டேன் செல்வராகவனா இது என்று கண்டிப்பாகத் தோன்றும். செல்வராகவன் ஃபாலோயர்ஸுக்கு இப்படம் மிகப் பெரிய ஏமாற்றமாய் இருக்கும்.

லாஜிக் மேஜிக் எல்லாம் விடுங்கள், எந்த ஒரு களமாய் இருந்தாலும் முக்கியமான விஷயம் நம்பகத்தன்மையை கொண்டு வருவது. அதில் கில்லாடியான செல்வராகவன் இந்த படத்தில் கோட்டை விட்டிருக்கிறார்.

அந்த முக்கியமான அம்மா கேரக்டர் ஃபாரின் அம்மணி ஸ்ப்ப்ப்பா.... படத்திற்கு பெயர் இரண்டாம் கிரகம் என்று வைத்திருக்கலாம்.

உங்கள் வீட்டில் சின்னப் பசங்கள் இருந்தால் ட்ரைலரில் வரும் சிங்கத்தைப் பார்த்து படத்துக்கு கூட்டிப் போங்கள் என்று நச்சரிக்கலாம். படத்தில் பத்து நிமிஷம் தான் அவை வருகின்றன. மற்ற நேரங்களில் உங்களை அவர்கள் நச்சரித்துவிடுவார்கள் ஜாக்கிரதை.

இந்த ப்ரொடெக்‌ஷன் க்வாலிட்டி மிகப் பாராட்டப் படவேண்டிய ஒன்று ஆனால் திரைக்கதையும் மற்ற விஷயங்களும்  அதை விரயமாக்கிவிட்டன....ஹூம்ம் ஒன்னும் சொல்வதற்கில்லை. நார்னியாவை படு லோக்கலாய் எடுத்த மாதிரி இருக்கிறது.

Tuesday, November 05, 2013

தீபாவளி

தீபாவளிக்கு இன்னும் இரண்டே நாட்கள் இருந்தன. ஆறு மாதம் கழித்து ஊருக்குப் போகப் போகிறோம் என்பதை விட, எம்.எஸ்.ஸியை பாதியில் விட்டுவிட்டு வந்த  இரண்டுவருடங்கள் படித்த கம்ப்யூட்டர் கோர்ஸ் முடிகிறதே என்பதை விட, அன்று சாயங்காலம் ஆறு மணிக்கு பஸ்ஸில் தீபாவளிக்கு ஊருக்குப் போகப் போகிறோம் என்ற எண்ணமே முன்னோங்கி நிறைந்திருந்தது. காம்பஸ் இண்டர்வியூக்களுக்குத் தயாராக வேண்டுமே, வேலை கிடைக்குமா என்ற மனக் கிலேசங்களை எல்லாம் தீபாவளி சற்று ஓரம் தள்ளிவிட்டிருந்தது. பஸ் ரிசர்வேஷன் திறந்த முதல் நாளே பாரிஸ் கார்னரில் க்யூவில் காத்திருந்து வாங்கிய டிக்கெட் பத்திரமாய் பர்ஸில் இருந்தது. இரண்டே மணிநேரம் தான் எல்லா டிக்கெட்டும் விற்று தீர்ந்து விட்டன. தாமிரபரணித் தென்றல் பஸ் அப்படி. கப்பல் மாதிரி சொகுசாய் மிதந்து போய் காலை ஆறு மணிக்கெல்லாம் திருநெல்வேலி வந்துவிடும்.

அப்போதெல்லாம் என்.ஐ.ஐ.டியில் இரண்டு வருட படிப்பு முடியும் போது ஒரு ப்ராஜெக்ட் செய்து அதன் தீஸிஸ் சமர்பிக்கவேண்டும். அத்தோடு யாரோ மண்டபத்தில் எழுதிக் குடுத்ததைக் கொண்டு வந்துவிடக் கூடாது என்று அது சம்பந்தப்பட்ட ஒரு டெக்னிகல் இண்டர்வியூவும் இருக்கும். காலை ஒன்பதரை மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட். என்னுடன் படித்த நண்பனும் நானும் காத்திருந்தோம்.  நண்பன் அப்போது டி.டி.பி ஆப்பரேட்டராக வேலை பார்த்து வந்தான்.  நான் மட்டுமே வெட்டி ஆபிஸர். "நான் ஆபிஸில் பாதி நாள் தான் லீவு சொல்லிட்டு வந்திருக்கேன். இன்னிக்கு முக்கியமான வேலை இருக்கு அதுனால நான் முதல்ல முடிச்சிடறேனே, ஆபிஸுக்கு சீக்கிரம் போக வசதியாய் இருக்கும்" என்று நண்பன் முன்னமே சொல்லி வைத்திருந்தான்.


அன்றைக்கு எங்களுக்கு வாய்த்திருந்த எக்ஸாமினர் ரொம்ப டெக்னிக்கல் என்று கேள்விப் பட்டிருந்தோம். அது எப்படி செஞ்சே இது எப்படி எழுதின என்று ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்டுக் குடைவார் என்று கேள்விப் பட்டிருந்ததால்
 மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் சோதித்துக் கொண்டிருந்தோம். மணி பத்தரை -  ஆளை இன்னும் காணவில்லை. பதினொன்று ஆகி பதினொன்றரை ஆன போது நண்பனுக்கு முகம் வெளிறி விட்டது. "டேய் நான் இன்னிக்கு கண்டிப்பா போயே ஆகனும்டா இல்லைன்னா வேலை போயிடும்டா...நான் என்னோட அப்பாயிண்ட்மெண்டை இன்னொரு நாளைக்கு மாத்திக்கிறேன்" என்று கிளம்பிவிட்டான்.  எனக்கு இதை முடித்து விட்டு ஊருக்குப் போனால் இரண்டு வாரம் இருந்துவிட்டு வருவதாய் ப்ளான். பின்னாலிருந்து கணக்கு போட்டு நாலு மணிக்கு முடிந்தால் கூட போதும் என்று காக்க ஆரம்பித்தேன்.

பன்னிரெண்டு மணிக்கு ஆய்வாளர் அவசர அவசரமாய் அவரது கேபினுக்கு ஏதோ ஃபைலும் கையுமாய் வந்தார். கேள்விக் குறியோடு என்னைப் பார்த்தவருக்கு, என் கையிலிருந்த ப்ராஜெக்ட் பைலை பார்த்ததும் தான் என்னுடைய அப்பாயிண்ட்மெண்டே நியாபகத்துக்கு வந்தது. "ஓ மை காட், ஐ ஆம் டோட்டலி சாரி, இன்றைக்கு ஒரு மிக முக்கியமான க்ளையண்ட் மீட்டிங் மறந்தே விட்டேன், இன்னும் ஒரு அரை மணி நேரத்தில் முடிந்துவிடும், காத்திருக்கிறாயா.?" என்று கேட்டார். வேகமாய் தலையை ஆட்டினேன்.

மீண்டும் முதல் பக்கத்திலிருந்து ரிப்போர்ட்டை புரட்ட ஆரம்பித்தேன். அவர் திரும்ப வருவதற்கு மணி இரண்டாகிவிட்டது. "வெரி வெரி சாரி, மீட்டிங் முடிய ரொம்ப லேட்டாகிவிட்டது. நீ சாப்பிட்டாயா " என்று கேட்க, என்ன சொல்லலாம் என்று யோசிப்பதற்குள் "நீ போய் சாப்பிட்டுவிட்டு வந்துவிடு நானும் சாப்பிட்டு அரை மணியில் ரெடியாகிவிடுகிறேன் முடித்துவிடலாம்" என்று தீர்பெழுதிவிட்டார். போச்சு... பெட்டியை வேறு எடுத்து வரவில்லையே வீட்டுக்குப் போய்விட்டு 11A பிடித்து பாரிஸ் கார்னர் போவதற்குள் தாவு தீர்ந்துவிடுமே என்று கவலையாகிவிட்டது. சும்மா கீழே போய் ஒரு டீ குடித்துவிட்டு பத்து நிமிஷத்தில் வந்துவிட்டேன். உள்ளே ஆய்வாளர் காரியரை திறந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நான் வந்ததை கண்ணாடி கதவு வழியாக நிமிர்ந்து பார்த்து உள்ளே என்னை அழைத்த போது மணி இரண்டு ஐம்பது. சாப்பிட்ட சாம்பார் மணக்க மணக்க ப்ராஜெக்ட் ரிப்போர்ட்டை வாங்கிப் பார்த்தவர், சம்பிரதாயமாக சாப்பிடவில்லையா என்று கேட்டார். பசி காதடைத்து இல்லை பரவாயில்ல நீங்க கேட்டதே வயிறு நிறைந்து விட்டது என்ற ரீதிக்கு ஏதோ உளறினேன். அப்புறம் நேராக டெனிக்கல் கேள்விகளுக்குப் போய்விட்டார். மொத்தம் பத்து கேள்விகள் தான் கேட்டிருப்பார். திடீரென்று நிமிர்ந்து உன்னுடைய எல்லா மார்க் சர்டிபிகேட்ஸும் கொண்டு வந்திருக்கிறாயா என்று கேட்டார். நல்லவேளையாக முழு ஜாதகத்தையும் ஃபைலில் வைத்திருந்ததால் தலையாட்டினேன். காலேஜு நாட்களுக்கு நேர் எதிராய் இங்கே எல்லா செமஸ்டரிலும் மார்க்குகள் முத்து முத்தாய் தொன்னூறுக்குக் குறையாமல் வேறு வாங்கியிருந்தேன்

ஒரு வெள்ளைத் தாளைக் குடுத்து தொன்னூறுகளில் மிகவும் பிரசித்தமான லின்க்ட் லிஸ்ட் டிசிஷன் ட்ரீ அல்காரிதத்தை சி++ல் எழுதச் சொன்னார். மட மடவென்று எழுதினேன். உற்றுப் பார்ததவர், இண்டர்வியூ மாதிரி கேள்விகள் கேட்க ஆரம்பித்துவிட்டார். அடுத்த அரை மணியில் எழுந்து போனவர், பத்து நிமிடத்தில் திரும்ப வந்து என்னை இன்னொரு அறைக்கு கூட்டிப் போனார். அங்கே இன்னும் இரண்டு ஆய்வாளகள் உட்கார்ந்திருக்க, என்னை நடுவில் ஒரு சீட்டில் உட்காரச்சொன்ன தொனியிலேயே எனக்கு அது காம்பஸ் இண்டர்வியூ என்று தெரிந்துவிட்டது. நல்லவேளை பயம் படபடப்பெல்லாம் காத்திருக்கும் போது தான் வரும், அவர்கள் எனக்கு பயப்பட, பட படக்க சந்தர்ப்பமே அளிக்கவில்லை. பிட்டத்தை நாற்காலில் சாய்ப்பதற்குள்ளாகவே கேள்விக் கணைகளை தொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அப்புறம் ஏதோ ஒரு கணக்கு குடுத்து அதை c++ ப்ரோக்ராமில்  எழுதச் சொன்னார்கள். நான் எழுதிக்கொண்டிருக்கும் போதே முன்னால் எழுதிய ப்ரோக்ராமை சரி பார்க்க ஆரம்பித்தார்கள். மார்க் ஷீட்டில் வேறு ஒரு தட்டி ஏதோ சங்கேதம் காண்பித்தார். நான் ப்ரோக்ராம் எழுதிக் குடுக்கஅதை இரண்டு நிமிடம் பார்த்து விட்டு என்னையே திருத்தச் சொன்னார்கள். சும்மா ரெண்டு மூனு சிண்டெக்ஸ் தவறுகளை மட்டும் பென்சிலால் சுழித்து திரும்ப நீட்டினேன். கம்ப்யூட்டரில் ஏத்தியிருந்தால் முஹே பச்சாவ் முஜே பச்சாவ் என்று கதறியிருக்கும். இரண்டு கம்பெனி பெயர்களை சொல்லி எந்த மாதிரி வாய்ப்பை எடுத்துக்கொள்வாய் என்று கேட்டபோது அர்விந்த் சாமி மாதிரி நான் ரோசாவைத் தான் கட்டிப்பேன் என்று பதில் சொன்னேன். ஏன் என்று கேட்ட போது ஏன்னா எனக்கு ரோசாவத் தான் ரொம்ப பிடிச்சிருக்கு என்பதையும் பதவிசாய் டாண்ணு சொல்லிவிட்டேன்.


சிரித்துக் கொண்டே சரி எதுக்கும் நாளைக்கு காலைல எட்டு மணிக்கு இங்க வந்துடுன்னு சொன்ன போது எனக்குப் பகீரென்றது. இன்னும் ஒரு மணிநேரத்துல நான் தாமிரபரணித் தென்றல்ல திருநெல்வேலி போறேன் சார்னு டிக்கட்டை காண்பித்த போது ஒருவர் என் தோளை அணைத்து ரூமை விட்டு வெளியே கூட்டிக் கொண்டுவந்து ராசா உனக்கு வேலை கிடைச்சாச்சு பொண்ணு வேற யாருமில்ல உனக்குப் பிடிச்ச ரோசாவே தான் என்ற போதும் கூட விஷயத்தை உணராமல், சார் நாளக்கழிச்சு தீபாவளி சார்,  இதோ போய்ட்டு இப்படிங்கிறதுக்குள்ள வந்துடறேன், ரோசா அதுவரைக்கும் காத்திருக்க மாட்டாளா என்று தான் கேட்டேன். யோவ் என்னைய்யா பேசற நாளைக்கு காலைல நீ வேலைக்கு சேர்ற சந்தோஷப் படுய்யா என்று அவர் ஒரு அதட்டு போட்ட போது தான் எனக்கு விஷயம் உரைக்க ஆரம்பித்தது.

அப்புறம் அரக்க பரக்க பாரிஸ் கார்னர் போய் கஷ்டப்பட்டு வாங்கிய டிக்கெட்டை விற்க நாய் படாத பாடு பட்டதும், கண்டக்டர் அந்த டிக்கெட்டை ஆட்டையைப் போட பார்த்ததும் அப்புறம் வேறு ஒரு தெகிரியமான அம்மணி நீ குடு ராசா நான் கண்டெக்டர பார்த்துக்கிறேன்னு வாங்கிக் கொண்டதும், ஒன்பது மணிக்கு மேல் எஸ்.டி.டி சார்ஜ் கம்மியானதும் ஊருக்கு ஃபோன் போட்டு தீபாவளிக்கு வரவில்லை என்று தகவல் சொன்னதும், அவர்கள் ஏமாற்றமானதும் அப்புறம் வேலை கிடைச்சாச்சு என்று சொன்னதும் அவர்கள் சந்தோஷப்பட்டதும், நான் ரோசாவோடு தீபாவளி கொண்டாடியதும் படம் முடிந்து டைட்டில் கார்டு போடும் போது சைட்டுல குட்டியாய் ஓட வேண்டிய சீன்கள்.

மெசேஜ் என்னான்னா....ஆயிரம் தீபாவளி வரலாம் ஆனால் எனக்கு அந்த தீபாவளி தான் பொங்கல் அதாவது சர்கரைப் பொங்கல் !!!