Saturday, March 09, 2013

ஜில்பான்ஸ் - 090313

சமீபத்திய சந்தோஷம்
என்னுடைய முந்தைய பதிவு - மினி ஸ்கர்ட் இது வரை இந்த டுபுக்கு வலைத்தளத்தில் வரலாறு காணாத அளவுக்கு சில பல லட்சங்களில் (சரி சரி...ஆயிரங்களில் :)) ஹிட்டுகளை அள்ளி, அதிக ஹிட் வாங்கிய பதிவுகள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. ங்கொக்கமக்கா நானும் நாமதேவர் வாமதேவர்ன்னு எவ்வளவோ நொங்கிப் பார்த்திருக்கிறேன்...ம்ஹூம்...சரிபட்டு வராது போல. அடுத்த பதிவு "உள்பாவாடை" ட்ராஃப்டில் இருக்கிறது. சீக்கிரம் எழுதி முடிக்கணும்.

சமீபத்திய ஙே

ஆபிஸில் ஒரு வெள்ளைக்கார நண்பர் இருக்கிறார். இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஒருதரம் டெக்னிகல் டவுட்டுக்காக மொபைலில் ஜோதா அக்பர் வீடியோவைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று மொபைல் ஸ்க்ரீனை எட்டிப் பார்த்து அன்றிலிருந்து ஐஸ்வர்யா ராய் ரசிகராகிவிட்டார். அடிக்கடி பார்க்கும் போதெல்லாம் என்னிடம் ஐஸ்வர்யா எப்படி இருக்கிறார் என்று விசாரிப்பார். நானும் "நேத்து கூட பேசினேன்; உன்னப் பத்தி சொல்ல மறந்துட்டேன் அடுத்த தரம் நியாபகம் வைச்சிக்கறேன்" என்று தேற்றுவேன்.(இப்போதெல்லாம் காலையில் மொபைலில் பேஸ்புக்கை திறந்த்தால் "குட்மார்னிங்லு, ஈரோஜு ஏமி ஸ்பெஷல்" என்று மதுரமாய் ஒரு ஃபோட்டோவுடன் சமந்தா கேட்கிறார். நானும் "அந்த ஸ்பெஷலே நீங்க தாங்க"ன்னு ஒரு கும்பிடு போட்டுவிட்டு மங்களகரமாய் நாளை ஆரம்பிக்கிறேன் என்பது தேவையில்லாத விஷயம்).
போன வாரம் ஒரு சேஞ்சுக்கு படம் பார்ப்பதை விட்டு பாட்டு கேட்டுக் கொண்டிருந்தேன். இளையராஜா "பொத்தி வைச்ச மல்லிகை மொட்டு" பாட்டில் வயலினை இழைய விட்டுக் கொண்டிருந்தார். வெள்ளைக்கார நண்பர் நேராக வந்து ஹெட்போனை வாங்கி பாட்டைக் கேட்க ஆரம்பித்து விட்டார். இது சூப்பர் ஹிட் பாட்டு, நம்ம மொட்டை மீசிக் என்று நானும் பாட்டின் பெருமைகளை எடுத்து விட, "எல்லாஞ் சரி, பாட்டு வரிகளுக்கு என்ன அர்த்தம்" என்று சீரியஸாய் கேட்க, ஸ்ப்ப்பா பாட்டுக்கு அர்த்தம் சொல்லத் தெரியாமல் முழிச்சேன் பாருங்க. அப்புறம் "தம்பி ஐஸ்வர்யா ராய் புள்ள குட்டி பெத்து செட்டிலாகிட்டாங்க புதுசா அனுஷ்கா ஷர்மான்னு ஒரு அம்மணி இருக்காங்கன்னு..."ன்னு அவரை அனுப்பி வைத்தேன்.ம்ம்ம்ம் ரொம்ப நோண்டினா தான் சில சூப்பர் ஹிட் பாட்டெல்லாம் எவ்வளவு வெவரமா இருக்குன்னு புரியுது.


சமீபத்திய திரைப்படம்

இது சமீபத்தில் வந்த படமல்ல. ஆனால் திரும்ப ஒருமுறைப் பார்த்து அசந்த படம். "பூ". என்னளவில் ஒரு மிகத் தரமான திரைப்படம். படத்தில் இயக்குனர் சசி & கதாசிரியர் தமிழ்செல்வனின் சிந்தனையும், பல காட்சி அமைப்புகளும் அபாரம். தன் காதலனை இழக்கும் போது கூட அழாத கதாநாயகி கடைசிக் காட்சியில் அத்தனைக்கும் சேர்த்து மொத்தமாய் ஓலமிட்டு அழுவது ஒரு கவித்துவமான முடிவு. காதல் என்பது ஒரே ஒருவருடன் ஒரே ஒரு முறை பூக்கும் வெங்காயம், ‘கல்லானாலும் கணவன்’ என்று டாஸ்மார்க் கணவனுக்காக மட்டுமே விரதமிருப்பார் மனைவி போன்ற க்ளீஷேக்கள் நிறைந்த தமிழ் தமிழ்ப் பட கலாசாரத்தில், கல்யாணமான பிறகும் கடமையாற்றிவிட்டு அடிபட்ட காலுடன் கொளுத்தும் வெய்யிலில் காதலனைப்  பார்க்க ஓடி வந்து ஸ்லாகிக்கும் உணர்வு தமிழில் ரொம்ப சொல்லாதது. மச்சான் ஒரு தம்மு இருக்கான்னு பெண்கள் கடன் வாங்கி தம் அடிப்பதைக் காட்டுவதே பெரிய பெண்ணிய சிந்தனை போன்ற கண்றாவிகளுக்கு நடுவில்  பெண்ணிய உணர்வுகளை ரொம்ப முன்னிருத்தி ஆனால் அதே சமயம் அதை காட்சிகளில் ரொம்ப suttleஆக வைத்த பாணி எனக்கு மிக மிகப் பிடித்தது. ஸ்ரீகாந்த் அலட்டாமல் நடித்திருந்தாலும், கதை கதாநாயகியின் களம் என்பதால் பார்வதி மேனன் படம் எங்கும் நடிப்பினால் வியாபித்திருக்கிறார்.அறிமுக கதாநாயகி என்று உணரமுடியாத அளவிற்கு நடிப்பில் கலக்கியிருக்கிறார். தமிழில் இந்த மாதிரி ஒரு அறிமுக நாயகி டாமினேட் செய்வது அபூர்வம்.நெஞ்சிலும் மாரிலும் அடித்து கொண்டு அழும் ஓவர் ட்ராமாட்டைசேஷனுக்கு மத்தியில் இந்த திரைப்படம் சில்லென்று இருந்தது. ஒருவேளை அப்புறம் பார்க்கலாம் என்று இன்னும் பார்க்காமல் வெயிட்டிங் லிஸ்டிலிருந்தால் கண்டிப்பாய் பாருங்கள்.

இது தான்டே சமாதானம்

செய்தியைப் படித்து அரண்டே போய்விட்டேன். மரியா கேரி பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள் பிரபல பாடகி. நிக்கி மினாஜ் பற்றியும் கேள்விப்பட்டிருப்பீர்கள் பிரபல பாடகி. இருவரும் அமெரிக்கன் ஐடல் என்ற நிகழ்சிக்கு நடுவராய் இருந்தார்கள். பிரபலம்னாலே ப்ராபளம் தான் என்ற வேத வாக்குப்படி இருவருக்கும் ஈகோ பிரச்சனையில் குழாயடி சண்டையாகிவிட்டது. இந்த குழாயடி சண்டையெல்லாம் பெரிய அதிசயம் இல்லை என்றாலும்,இங்கே ரொம்பவே ரசாபாசமாகி செல்வராகவன் படம் மாதிரி "யேய்...ஸெக்ட்சுப் போட்ருவேன்டி" என்பது வரைக்கும் போய், ரெண்டு நாள் இசை சம்பந்தப்பட்ட ஊடகங்கள் மட்டுமின்றி வம்புக்கு அலையும் எல்லா ஊடகங்களிலும்  அல்லோலப்பட்டது. நம்மூர் டீ.வியில் நாலு பேர் கேமிரா முன்னாடி உட்கார்ந்து கொண்டு, ஐ.பி.சி என்ன சொல்லுதுன்னா என்று  உட்கார்ந்தமேனிக்கு தீர்ப்பு சொல்லுவது மாதிரி இவர்களும் கலகத்தைக் கலக்கிவிட்டு கல்லா கட்டிக் கொண்டிருக்கும் போது, திடீரென்று அவர்கள் இருவரும் "நிறுத்துங்கடா...ரீலு அந்து போச்சு நாங்க இப்போ சமாதானம் ஆயாச்சு" என்று பொசுக்கென்று சமாதானமாகிவிட்டார்கள். ஹலோ டெம்போலாம் வைச்சு கடத்தியிருககிறோம், எங்கள கேட்காம நீங்க எப்படி சமாதானம் ஆகலாம்ன்னு இந்த பக்க தரப்பு நொந்து போயிருந்தபோது "ரொம்ப பிரச்சனையாகிப் போச்சு, அதனால நிக்கி மினாஜ் நடிச்ச மேட்டர் வீடியோ ஒன்னை போட்டு பார்த்து ரெண்டு பேரும் ரொம்பவே சுமூகமாகி விட்டோம்"ன்னு  குடுத்தாங்க பாருங்க ஒரு ஸ்கூப். ஆஹா எனக்கு வேற சில பல எதிரிகள் இருக்காங்களேன்னு பதறிப் போய் படித்தால் அப்புறம் சும்மா ஜோக்குக்கு அப்படிச் சொன்னாங்களாம். அடப் போங்கடே