Tuesday, January 22, 2013

சினேகங்கள்

"திருநெல்வேலி போகிற ட்ராவல்ஸ் பஸ்லாம் இங்க தானே நிற்கும்?" -  சென்னை மாநகரின் அத்தனைக் கூட்டத்திலும் அந்த ஆளிடம் ஏன் கேட்டேன் என்று இப்போது யோசிக்கிறேன். ஒரு வேளை மல்லு வேட்டியை மடித்து கட்டி, தெத்துப் பல்லுடன், ஒல்லியான கைக்கு பொருந்தாத பெரிய ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்ட்ராப்புடன் வாட்ச் அணிந்திருந்தது அவரை கொஞ்சம் அப்பாவியாய் காட்டியதால் இருக்கலாம்.  "கே.பி.யனா..." என்ற கேள்விக்கு ஆமாம் சொல்லித் தொலைத்திருந்திருக்கலாம். "அட ஏ.வி.ஆர்.எம்வியா அங்க நிக்கும் சார், வாங்க நாங்களும் அதுக்குத் தான் வெயிட்டிங்" என்று அன்யோன்யமாய் அழைத்துப் போய்விட்டார். "சாரும் நம்ம பஸ்ஸுத் தான்...நெல்லைக்குத் தான்" என்று அவர் மனைவியிடம் அறிமுகம் வேறு. அவர் கொஞ்சம் தேவலாம், சீ த்ரூ ஜார்ஜெட் சாரியை பதவிசாய் அணிந்து, இவரை விட விவரம் என்று தெரிந்தது. கழுத்தில் ஒரு எட்டு பவுன் பாரு பாருவென்று என்று மின்னிக் கொண்டிருந்தது.

சென்னை வெப்பம் சட்டையிலும், அக்குளிலும் கசகசத்தது. நின்றவாறே சுற்றிப் பார்த்தேன். ஏகப் பட்ட பாலங்கள், அவற்றின் கொள்ளவுக்கு மூன்று மடங்கு கூடுதலாய் வாகனங்கள், இந்தியா மிளிரும் ரோட்டுக் கடைகள், பள பள கண்ணாடி சுவற்றுக்குப் பின்னால் ஏசியில் புரளும் கரன்சிகள், சம்பந்தமே இல்லாமல் அவற்றின் வாசலில் இருக்கும் பொட்டிக் கடையில் பல்லைக் குத்திக் கொண்டு நிற்கும் பைக் ஆபிஸர்கள், வாய் நிறைய "....த்தா"க்களுடன் பொதுஜனம். ஏகப் பட்ட மாற்றங்கள்  - இருந்தாலும் ஊர் மாறவே இல்லை.

"ஃபோன் போட்டு சொல்லாட்டி அப்படியே அழுத்திகிட்டு போயிடுவானுங்க...உள்ளியே வரமாட்டானுங்க நான் அப்பவே ஃபோன் போட்டு சொல்லிட்டேன், நீங்க வேஸ்டா கால் பண்ணிராதீங்க"". ஊரை விட்டுப் போய் பன்னிரெண்டு வருடங்கள் ஆயிற்று. கட்டிடங்கள் மாறியிருக்கலாம் பாலங்கள் மாறியிருக்கலாம் ஆனால் அவற்றையெல்லாம் தாண்டிய இந்த மாதிரி முத்திரைகள் ஊர் இன்னும் மாறவே இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தன.

அவர் மனைவிடம், ஜிப்பா, பவுடர், ஜவ்வாது. சந்தனம் சகிதமாய் இருந்த நபர் பேசிக் கொண்டிருந்தார். "என்ன நட்சத்திரம்" என்று சந்தனம் விசாரித்துக் கொண்டிருந்தார். ஜோசியராயிருக்கலாம். "ஆனி போய் ஆடி வந்தா டாப்புல வருவான்" சினிமா வசனம் நமுட்டுச் சிரிப்பாய் நியாபகத்துக்கு வந்தது. "சாமி அப்படியே புட்டு புட்டு சொல்றாப்புல...என்னய பத்தித் தான் கேட்டுக்கிட்டிருக்கும்" என்று மல்லுவேட்டி சிலாகித்துக் கொண்டிருந்தது போது "உன் புருஷனுக்கு கொளுந்தியா மேல ஒரு கண்ணு..நீ ஜாக்கிரதையா இருக்கணும்" என்று சந்தனம் எடுத்து விட்டுக் கொண்டிருந்தார்.  மல்லு வேட்டி காதிலும் விழ "அப்படியெல்லாம் ரொம்ப இல்லீங்க...சும்மா ஒரு இது அவ்ளோ தான்" என்று கெக்கெ பிக்கெவென்று பல்லைக் காட்டிக் கொண்டிருந்தார்.

எனக்கு பஸ் வந்தால் தேவலாமாயிருந்தது. வாட்ச் இன்னமும் லண்டன் டைமை காட்டிக் கொண்டிருக்க  செல் ஃபோனை மணி பார்க்க எடுத்தேன்.

டொகொமோவா...

....யாரு....

இல்ல செல்லப் பார்த்தா டொகொமா மாதிரி இருக்கேன்னு கேட்டேன்...இல்ல ஏர்செல்லா? இப்பலாம் டவரு மின்ன மாதிரி கெடைக்க மாட்டேங்குதுல்ல ...ஹூம் அவன் என்னத்த பண்ணுவான்? ஜனத்தொகை பெருத்துப் போச்சு  கவர்மென்ட்ல அடிச்சிகிராய்ங்க யாரு கேக்குறா

விஷயம் தெரியும் என்று அவன் காட்ட நினைத்த முனைப்பு அப்பட்டமாய் தெரிந்தது. சுற்றிப் பார்த்தேன்.

"அந்த கடைக்குப் பின்னாடி இருக்கு சார். ரெண்டு ரூவா.. பாத்ரூம்ஸ் போய்ட்டு வரணும்னா வாங்க பைய வேணா பார்த்துக்கிறேன். டபுள்ஸ்ன்னா அஞ்சு ரூபா"

அவன் மனைவி சந்தனத்தோடு பலத்த ஆலோசனையில் இருந்தாள். சந்தனம் இப்போது பையைத் துளாவி பெரிய மந்திரவாதி மாதிரி கண்ணை மூடி தாலிக்கு குங்குமப் பொட்டு விட்டுக் கொண்டிருந்தான். அவளும் தாலியைக் காட்டிக் கொண்டு, சாமியை நேரில் பார்ப்பது மாதிரி பரவசமாயிருந்தாள்.

எனக்கு சந்தனத்தைப் பார்த்தாலே சரியாய் படவில்லை. அவன் இன்னும் கொஞ்ச நேரத்தில் அந்த செயினை ஆட்டையைப் போட்டுக் கொண்டு போகப் போகிறான் என்பது அப்பட்டமாய் தெரிந்தது. ப்ச்..இந்த மல்லுவேட்டி என்னிடம் வந்து டோகாமாவா ககோமாவான்னு பிதற்றிக் கொண்டிருக்கிறது. போடா போ அங்கே போய்ப் பார் அந்த சந்தனம் உன் பெண்டாட்டி தாலியை உருவிக் கொண்டிருக்கிறான்.

என்னங்க என் தாலியக் காணோம்ங்க...ஓடுறா... அவன் தான் அந்த சந்தனம் தான்... நான் பார்த்தேன் ...குங்குமம் வைக்கும் போதே நினைச்சேன். இப்படியா தாலிய பெப்பரப்பேன்னு காட்டுவாங்க..போடுறா அவன மண்டமேலயே ஒன்னு போடுறா

என் சமூக பிரக்ஞை வயிற்றை முட்டிக் கொண்டு வர ரெண்டு ரூபாய் சில்லறையை தேட வேண்டியிருந்தது. திரும்ப வந்த போது பஸ் வந்துவிட்டிருந்தது.

"சீக்கிரம் வாங்க சார் வண்டி கிளம்பிடப் போகுது. நான் தான் நீங்க பாத்ரூம்ஸ் போயிருக்கீங்கன்னு டிரைவர பிடிச்ச்சு வைச்சிருக்கேன்"

சந்தனம் எனக்கு முந்தின சீட். மல்லுவேட்டியும் அவன் மனைவியும் அதே வரிசையில் அந்தப்புறம் இரண்டு சீட். என் பக்கத்து சீட் காலி என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே மல்லுவேட்டி என் பக்கத்தில் வந்து மாறி உட்கார்ந்தான். "அவளுக்கு சாமி கிட்ட ஜோசியம் கேக்கனுமாம் நான் இங்க வந்தா உங்களுக்கும் பேச்சுத் துணையா இருக்குமில்ல" என்று உதவி செய்வதாக அவனே முடிவு கட்டிக் கொண்டான். அவன் மனைவி விண்டோ சீட்டிலிருந்து மல்லுவேட்டியின் சீட்டிற்கு மாறிக் கொண்டு இந்தப்புறம் இருந்த சந்தனத்திடம் பேசிக் கொண்டிருந்தாள்.

"வேட்டைக்காரன் சினிமாவாம்...  தாம்பரம் தாண்டித் தான் ஆரம்பிப்பான். பிடிச்சிருவாங்கல்ல அதான்"

அவன் மனைவி கழுத்தில் செயின் தெரிகிறா என்று எட்டிப் பார்த்தேன். தாலி ஜார்ஜெட்டுக்கு வெளியில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது.

"நீங்க கம்மூட்டர்ல வேலை பார்க்கீங்களாமே...பெங்களூர்ல... கரெக்ட்டுத்தானா ...சாமி தான் புட்டு புட்டு வைக்காரே"

விடமாட்டான் என்று தெரிந்தது. "ம்ம்ம் கரெக்ட்டுத் தான். உங்களுக்கு எந்த் ஊரு. என்ன வேலை பார்க்கறீங்க?"

"நமக்கு ஒன்னா ரெண்டா `இந்த ஆயிரம் வேலைக்காரன்`- ன்னு சொல்லுவாங்கல்ல அது நம்மளத் தான். அவ்ளோ வேலையும் பார்ப்பேன் காலைல எந்திரிச்சோம்னா அப்பாடான்னு வந்து படுக்க ராத்திரி பத்து மணியாயிடும் 

சரிதான். வெட்டி ஆபிஸர் என்று அர்த்தம் கொண்டேன்.

சார்...பெங்களூர்ல பொண்ணுங்கலாம் முட்ட முட்ட ரிங்க்ஸ் அடிப்பாங்களாமே,

.....

கூட ஆடியிருக்கீங்களா சார்

என்னங்க என் தாலியக் காணோம்ங்க...புண்ணாக்கு போய் உன் மனைவி செயினை காப்பாத்துய்யா. சந்தனம் பஸ் சத்தத்தில் காது கேட்காத மாதிரி அவன் மனைவி கழுத்துக்கு மிக அருகில் வந்து காதில் பேசிக் கொண்டிருந்தான். அவன் மனைவியும் ரொம்ப ஆழ்ந்து பேசிக்கொண்டிருந்தார். ஜனங்களுக்கு பிற்காலத்தைப் பற்றிய ஆருடத்தில் தான் எவ்வளவு ஆர்வம்.

தாம்பரம் தாண்டி வேட்டைக்காரன் புண்ணியத்தில் கண்கள் தானாய் மூடிக் கொண்டன. முழித்துப் பார்த்த போது மூன்றைத் தாண்டியிருந்தது. பஸ் ஏதோ ஒரு மோட்டலில் நின்று கொண்டிருந்தது. கீழே அல்லோலப் பட்டுக்கொண்டிருந்தது.

"பெப்பரப்பேன்னு தாலியக் காட்டும் போதே நினைச்சேன் "

யோவ் என்னைய்யா நினைச்சிக்கிட்டு இருக்க....ட்ரைவர் வண்டிய அடுத்த போலிஸ் ஸ்டேஷன்ல விடுவார் நீங்க உங்க பஞ்சாயத்த அங்க வைச்சிக்கோங்க" - கண்டெக்ட்டர் பலத்த சத்ததில் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தார்.  சந்தனம் தான். மாட்டிக் கொண்டான் என்று நினைக்கிறேன்.

இறங்கிப் போய் சந்தனத்தை முதுகில் தொட்டேன்.

"சுக்கிரன் எப்போ வரும் செவ்வாய் எப்போ வரும்ன்னு சனியன் நூறு ரூபாய குடுத்துட்டு கேட்டுக்கிட்டே வந்தா சார் நானும் பொம்பளையே பாவமேன்னு சொல்லிக் கிட்டு இருந்தேன்.. பாக்கெட்டுல கத்தையா ஆறாயிரத்தி சொச்சம் வைச்சிருந்தேன் சார் அவுசாரி மு**** ஆட்டையப் போட்டுட்டா சார். திருச்சில இறங்கிப் போய்ட்டாங்களாம்"

எனக்குப் பகீரென்றது. பாக்கெட்டில் கைவிட்டுத் துளாவினேன். பர்ஸைக் காணோம்.

ஊர் ரொம்பவே மாறி இருக்கிறது.

11 comments:

bandhu said...

அய்யோ ! ட்விஸ்ட் சூப்பர்!

Poetry said...

Chance illa :)

வல்லிசிம்ஹன் said...

கதையா டுபுக்கு. ஹோப் இட் ஈஸ்.

நீங்க ஊருக்கு வந்திருப்பதாயிருந்தால் நலமன விடுமுறை வாழ்ஹ்துகள்.

Akhila said...

Semma...

Anonymous said...

பிரமாதம் எதிர் பாக்கவே இல்லை அந்த டிவிஸ்ட் ... தூள் கிளப்பிடீங்க .. Paavai

balutanjore said...

dear dubuks
i did not visit your blog for a long time thinkin that you rarely write nowadays.it was a pleasant surprise today.nice story.pl continue writing.all the best

balu banalore(ippo b lore vaasam paiyan inge potti thattaraan)

balutanjore said...

dear dubuks
i did not visit your blog for a long time thinkin that you rarely write nowadays.it was a pleasant surprise today.nice story.pl continue writing.all the best

balu banalore(ippo b lore vaasam paiyan inge potti thattaraan)

துளசி கோபால் said...

ஹைய்யோ!!!!! முடிவு சூப்பர்!

Anonymous said...

Dubukku,

The Dubukku-touch in the end was splendid! Back in your finest form...
Oru SandEgam - idhu nijamalla kadai thaanE?

Shubha

Anonymous said...

dorai kathai ellam eluthuthu?? eppa regulara elthunga.theedrunu kanamal poka koodathu.

ayyo naane vai veikirene???

Dubukku said...

bandhu - மிக்க நன்றிங்க

Poetry - மிக்க நன்றிங்கோவ்

வல்லியம்மா - மிக்க நன்றிம்மா. இது கதை தான் ஆனா ...விவரமா சீக்கிரம் சொல்றேன் :)))

அகிலா - டேங்க்ஸ்கோவ்

பாவை - மிக்க நன்றி மேடம். நலமா?

பாலு - வாங்க சார் நலமா. ஓ பெங்களூர் வாசமா. என்னாது பையன் பொட்டி தட்டறானா...சார் உங்க வயசு தெரியாம எதாவது மரியாதைக் குறைவா பேசியிருந்தா மன்னிசிடுங்க.

துளசி - ரொம்ப நன்றிக்கா. எப்படியிருக்கீங்க

சுபா - இது நிஜமுமில்லை கதையுமில்ல.விவரமா ஒரு பதிவு போடுவேன் :)

அனானி - ஹா ஹா கொஞ்சம் அப்பப்போ கதை எழுதுவேனே படிச்சதில்லையா? :)) பார்போம் இந்த தரம் எவ்ளோ நாள் ஒடுதுன்னு

Post a Comment

Related Posts