Wednesday, July 18, 2012

புலம்பல்கள்

கடந்த சில மாதங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் நிறைய. நிறைய அடி பட்டு, பார்க்கிறவர்களை எல்லாம் நம்பிக் கொண்டு எவ்வளவு ஏமாளியாய் இருந்திருக்கிறேன் எனபதை புரிந்து கொண்டிருக்கிறேன். சமீபத்திய அனுபவங்களில் பலனாய் சக மனித நம்பிக்கை என்பது அடிபட்டு போய்க் கொண்டிருக்கிறது. இங்கே எழுதாததிற்கு இந்த மன உளைச்சல்கள் தான் முக்கிய காரணம். சொல்லாமல் கொள்ளாமல் நான் இப்படி லீவு போடுவதென்பது உங்களுக்கு புதிதொன்றுமில்லை என்றாலும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பின்னூட்டத்திலும், மெயிலும் விசாரித்தவர்களுக்கு மனதார நன்றி. குழப்பங்கள் இன்னும் ஓய்ந்த பாடில்லை என்றாலும் நம்ம கையில் ஒன்றும் இல்லை, எல்லாம் இஷ்ட தெய்வம் கத்ரீனா விட்ட வழி என்று மனம் ஒருமுகப் பட்டிருக்கிறது. விடுங்க பாஸ் பொழப்ப கவனிப்போம்


லண்டன்- ஒலிம்பிக்ஸினால் அதகளப் பட்டுக்கொண்டிருக்கிறது. போன வாரம் எங்க வீட்டுக் கொல்லைப்பக்கத்தில் நாலைந்து ஜாவலின் குச்சிகள் விழுந்து கிடந்தன. யாரோ ஸ்டேடியத்தில் ப்ராக்டீஸ் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.(ஹீ..ஹீ அதாவது யுவர் ஆனர் எங்கவூடு ஸ்டேடியத்திற்கு ரொம்ப பக்கம்ன்னு தாக்கல் செய்யுறோங்கோவ்). நண்பர் குழாமில் பல பேர்கள் ஒப்பனிங் செரிமனி கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள். இன்னும் சில பல நண்பர்கள் வாலன்டியர்களாய் நிர்வாகத்தில் பங்கு கொள்கிறார்கள். 100 மீட்டர் ஓட்டப்பந்தய ஃபைனல்ஸில் எனக்கு வைல்ட் கார்ட் எண்ட்ரி தராத காரணத்தினால் நான் வூட்டிலிருந்தபடி பக்கோடாவும் டீயும் குடித்துக் கொண்டே நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.

விளையாட்டு ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே சலசலபிற்கு குறைவில்லை. பாதுகாப்பு காண்டிராக்ட் எடுத்த G4S கம்பெனி போதுமான செக்யூரிட்டி ஆட்களை சப்ளை செய்ய முடியாது  என்று அமளி துமளி ஆகி பாதுகாப்பு என்னாவதுன்னு ராணுவத்தினரை கொண்டு வந்திருக்கிறார்கள். எதுக்கும் சேஃப்டிக்கு இருக்கட்டும் என்று மிஸைல் லாஞ்சரை ஒரு வீட்டு மொட்டை மாடியில் வைத்திருக்கிறார்கள். "என்னா விளையாடுறீங்களா...கம்ப்யூட்டர் மிஸ்டேக்ல ராக்கெட் திரி பத்திக்கிட்டு அதுபாட்டுக்கு லாஞ்ச் ஆகிடிச்சின்னா அப்புறம் எங்க ஐயாக்கு யாரு பதில் சொல்றதுன்னு" என்று ஒரு கூட்டம் அலம்பிக்கொண்டிருக்கிறது. பாதுகாப்பு வேணும் ஆனா செக்யூரிட்டி வேண்டாமா என்னடா தெளிவா குழப்புறீங்கன்னு அதிகாரிகள் குழம்பிப் போய் இருக்கிறார்கள். எல்லா நல்லவைய்ங்களும் இங்கே இருப்பது மாதிரி மழை வேறு கொட்டு கொட்டுவென்று இன்னும் கொட்டிக் கொண்டிருக்கிறது. வருகிற கூட்டத்தினால் லண்டனே ஸ்தம்பிக்கப் போகிறது என்று பேப்பர்கள் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன. இத்தனைக்கும் நடுவில் மக்களுக்கு நடுவில் உற்சாகம் என்னவோ கரைபுரண்டு ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. ஸ்டேடியத்தை ஓட்டி ஐரோப்பாவின் மிகப் பெரிய ஷாப்பிங் மால் ஒன்றை சமீபத்தில் திறந்துவிட்டார்கள். ஒன்னுமே வாங்காமல் கடை கடையாய் சுத்திப் பார்ப்பதற்கே ஒரு நாள் பிடிக்கும்.பாதாள ரயில் ஸ்டேஷனிலிர்ந்து இந்த மால் வழியாக ஸ்டேடியம் செல்ல வழியமைத்து ஸ்பெஷல் தரைகள் மூலம் மக்கள் நடப்பதிலிருந்தே மின்சாரம் உற்பத்தி செய்ய விவரமாய் டெக்னாலஜியை உபயோகப் படுத்தியிருக்கிறார்கள்.ஆக மொத்தம் இன்னும் ஆட்டம் ஆரம்பிக்கவே இல்லை அதற்குள் விறு விறுப்பாய் இருக்கிறது.


"Fifty Shades of Grey" என்கிற புத்தகத்தைப் பற்றி உங்களில் நிறைய பேர் கேள்விப் பட்டிருக்கலாம். செக்ஸ் கண்டெண்ட் அதிகம் உள்ள  - பெண்களுக்கான மேட்டர் புத்தகம் என்று பெண்களால் ஓகோன்னு கொண்டாடப் படுகிறது. இல்லை இல்லை இது அவ்வளவு எரோட்டிகாய் இல்ல..கொஞ்சம் ராவாய் இருக்கிறது என்று ஒரு கூட்டம் புலம்புகிறது. ஆனாலும் 4 மில்லியன் காப்பிகள் வித்து தீர்ந்து தற்போது சினிமாவாக ஆக்கப்பட்டு வருகிறது. இங்கிலாந்தில் தற்போது இந்த டாப்பிக் பயங்கர ட்ரெண்டாகி எல்லா இடங்களிலும் பெண்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. “உங்க வீட்டுல இன்னிக்கு என்ன சமையல்” என்பது போய் “பிஃப்டி ஷேட்ஸ் படிச்சியா அதுல நாலாவது சேப்டர் மூனாவது பக்கத்துல..” என்று சௌஜன்யமாகிக் கொண்டிருக்கிறது. காலங்கார்த்தால ட்ரெயினில் நிறைய பெண்கள் இந்தப் புத்தகத்தை படிப்பதைக் கண்கூடாக காண முடிகிறது. “நல்லாத்தேங் இருக்கு ஆனா இத விட மேட்டர் புஸ்தகமெல்லாம் படிச்சிருக்கேன், அதுனால இது தான் சூப்பர்ன்னு இத்தோட நின்னுடாதீங்கோவ்”ன்னு லண்டன் மெட்ரோ பேப்பர் SMS செக்‌ஷனில் பெண்கள் கலாசிக் கொண்டிருக்கிறார்கள். ங்கொய்யால நானெல்லாம் காலேஜ் ரெக்கார்ட் நோட்ல மறைச்சு வைச்சு படிக்க எவ்ளோ கஷ்டப் பட்டிருக்கேன்..எங்கடா போனீங்க அப்போல்லாம்...? ..ஹூம்