Saturday, June 26, 2004

இவனுக்கு வேற வேலையே இல்லை...?

எப்போ பாரு இந்த வாரம் எழுத முடியல...அடுத்த வாரம் எழுத முடியலன்னு ..முயற்சிக்கிறேன்...இப்பிடியே ஓட்டிக்கிட்டு இருக்கான்..என்ன தான் நினைச்சிக்கிட்டு இருக்கான் மனசுல...நாலு பேரு படிக்கிறதால பந்தா விடறானா? இதுக்கு பேசாம இழுத்து மூடிட்டு போயிடலாமே...ரஜினி மாதிரி இப்போ வரேன் அப்போ வரேன்னு இன்னொரு தரம் அறிக்கை விடு மவனே அப்புறம் இருக்கு உனக்கு...

அண்ணே அண்ணே...வேண்டாம்ன்ணே...எதோ சின்னப் பையன்...மன்னிச்சுவிட்றுங்க...வேலை ஜாஸ்த்தியாயிடுச்சு...புதுசா பொறுப்புக்கள் குடுத்திருக்காங்க..அதான் வரவே முடியலை. அதனால இனிமே கொஞ்ச நாளைக்கு வாரக் கடைசில மட்டும் தான் வர முடியும்ன்னு நினைக்கிறேன். அதுவும் எவ்வளவு தூரம் நடக்கும்ன்னு தெரியலை.. கிடைக்கிற சந்தர்பத்தில இங்கேயும் உங்க வலைப்பதிவுகளிலும் உங்கள் சந்திக்கிறேன். அதுவரைக்கும்.....

Monday, June 14, 2004

அதே தான்..!

for picture version of this post(?!!&) click here
திடீரென்று ஒரு வாரம் வாடிக்கையாளர் இடத்துக்குப் போய் அவர்கள் கழுத்தை அறு என்று உத்தரவு வந்துவிட்டதால்...வாடிக்கையாளர் இடத்திற்கு போகவேண்டியதாகிவிட்டது. நான் அறுத்ததிற்கு பழிவாங்கும் விதமாக அவர்கள் என் கழுத்தை அறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.எத்தனை நாட்கள் இது நீடிக்கும் என்று தெரியாது.
எப்பிடியாவது எழுதிவிடலாமென்று நினைத்திருந்தேன். வாரக் கடைசியிலாவது எழுதலாமென்றால் வெளியே சென்று விட்டேன். இந்த வாரம் திருட்டுத் தனமாகவாவது எழுத முயற்சிக்கிறேன். முடியாவிட்டால் கோச்சுக்காதீங்க. (கட்டளை தான் நியாபகத்துக்கு வருது :P)
ஹூம் திருட்டுத்தனமாகவாவது உங்க வலைப்பதிவுகளையெல்லாம் படிக்க முயற்சிக்கிறேன்.

Friday, June 04, 2004

பெத்த மனம்.

for picture version of this post Part 1 Part 2

விசிஷ்டாவிற்கு பிறந்தநாள். விசிஷ்டா வர்ஷாவின் முதல் நண்பன். என்ன வாங்கலாம் என்று ஒரே மணடைக் குடைச்சல். சின்னக் குழந்தை மாதிரி கடையில் இருந்த எல்லா விளையாட்டு பொருட்களையும் எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். பேசாமல் வர்ஷாவையும் கூட்டிக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் வந்தால் அவளுக்கும் ஒன்று அதே மாதிரி வாங்கவேண்டும். எதுக்கு இப்போ தண்டச் செலவு. இப்போதான் பிறந்தநாள் கழிந்து ஏகப்பட்ட விளையாட்டுச் சாமான்கள் பரிசாக வந்திருக்கு.ஏற்கனவே வீட்டில் இருக்கும் பார்பி பொம்மைகள், கரடிப் பொம்மைகள்,அவைகளை என் மகள் சொகுசாக வைத்துக் கொண்டு ஊர்வலம் வர ஒரு தள்ளுவண்டி, பிறந்தநாளுக்கு வாங்கிக் குடுத்த சைக்கிள், சைக்கிளில் பின்னாடி உட்கார்ந்து கொண்டுவர இன்னொரு பொம்மை...இது போக ஏற்கனவே இருக்கும் சப்பு சவரு...எவ்வளவு பொம்மைகள்? போறாதா? வீட்டில் வைப்பதற்கே இடமில்லை. நான் சின்னப் பையனாக இருந்த போது இவற்றில் காலில் பாதியைக்கூட கண்ணால் பார்த்தது இல்லை. விளையாட இவ்வளவு போதாதா...எல்லாவற்றிக்கும் கொடுத்த விலையைக் கூட்டிப் பார்த்தால் தலையைச் சுற்றும். பைசா என்ன மரத்திலா காய்க்கிறது? ரொம்ப வாங்கிக் குடுத்து குழந்தையைக் கெடுக்கக் கூடாது.

நாலு வயது பையனுக்கு என்ன வாங்கிக் குடுக்கலாம்? ஓரமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பெரிய பெட்டிகள் கவனத்தைக் கவர்ந்தன. ரிமோட் கன்ட்ரோல் கார். நான் சின்னப் பையனாக இருந்தபோது இதை யாராவது வைத்திருந்தால் அதைப் பார்க்கவே அலையோ அலையென்று அலைந்திருக்கிறேன். மிக நன்றாக இருந்தது. போட்டி போடுவதற்கு ரெண்டு கார் இருந்த்து. சரி வாங்குவோம் என்று முடிவுசெய்தேன். வர்ஷாவுக்கும் வாங்கிக் குடுத்தால் எவ்வளவு சந்தோஷப் படுவாள்.நாம் தான் அனுபவிக்கவில்லை அவளாவது விளையாடட்டுமே. பைசாவாவது நாளைக்கு சம்பாதித்துக் கொள்ளலாம் இந்த வயதில் விளையாடாமல் எந்த வயதில் விளையாடப் போகிறாள்? அதே விலைதான். கூட ஐந்து பவுண்டுனாலும் விலை அதிகமென்று யோசிக்கலாம். போனால் போகிறது "இன்னொன்னு குடுப்பா". வெளியில் வந்த பிறகு தான் பார்த்தேன். பாட்டரி தனியாக வாங்கவேண்டுமாம். போட்டிருந்த பேட்டரி எண்ணிக்கையைப் பார்த்தால் ஊருக்கே மின்சாரம் சப்ளை செய்யலாம் போல. பேட்டரி விலையோ பகீரென்றது. திரும்பவும் கூட கொஞ்சம் செலவு. பேசாமல் வந்திருக்கலாமோ?

"என்க்காகாகா அப்ப்ப்ப்ப்பா...தேங்க்க்க்க்யூயூப்பா..." கணகள் விரிய குழந்தை கட்டிக் கொண்ட போது எனக்கே யாரோ வாங்கிக் குடுத்தமாதிரி சந்தோஷமாக இருந்த்து. உடனே பிரித்து விளையாட ஆரம்பிச்சாச்சு. ஒரு கார் நன்றாக ஓடியது. இன்னொன்று தண்டம். செத்தவன் கையில் வெத்தலபாக்கு குடுத்த மாதிரி என்னுடைய பைசா அருமை தெரியாமல்...தண்டத்துக்கு ஊர்ந்தது. பத்து நிமிஷம் தான் வர்ஷா கவனம் பார்பிக்கு போய்விட்டது.

"அடச் சே...இதுக்கு இவ்வளவு தண்டம் அழுதிருக்கவேண்டாம்...பேசாம வரமாட்டேனோ...என் புத்தி இருக்கே..."

"அவளுக்கு கார்லலாம் அவ்வளவு ஆர்வம் இல்லை என்பது தெரியாதா உங்களுக்கு.அவளுக்குப் பிடித்ததாக எதாவது வாங்கி வரக் கூடாதா?" - உம்மாச்சிக்கு பதிலாக எனக்குத் தூபம் காட்டினார் அருமை மனைவி.

"எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு ...இத திருப்பி குடுத்துட்டு வந்திடறேன். வெறும் தண்டம். வர்ஷா க்கு அதுக்கு பதிலாக ஒரு ஒன்றரை அனா பொம்மை வாங்கிக் குடுத்திடலாம்"

தேவா இருந்திருந்தால் "சிங்கம் ஒன்று புறப்பட்டதே..." என்று பி.ஜி.,எம். குடுத்திருப்பார்.அவ்வளவு வேகமாக நடந்தேன்.

"நீங்கள் இரண்டு வாங்கியதால் விலையில் சலுகை தரப்பட்டது. இப்போது இதை திருப்பிக் குடுத்தால் அந்தச் சலுகை கிடைக்காது..பரவாயில்லையா?"

"பரவாயில்லை"

"ஏன் வாங்கின இன்னொரு காருக்கும் உண்டான சலுகையை வீணாக்குகிறீர்கள்...அதற்குப் பதிலாக வேறு பொம்மை வாங்கலாமே " - விட்டால் எனக்கே இன்னொரு கல்யாணம் பண்ணி வைத்துவிடுவாள் போல. அவ்வளவு சாமர்த்தியத்துடன் பேசினாள். இவள் தொல்லையைச் சமாளிக்க சும்மா ஒரு தரம் கடையைச் சுற்றி வந்து எதுவும் பிடிக்கலை என்று சொல்லிவிடலாம் என்று நினைத்தேன்.

எல்லாப் பொம்மைகளையும் நகைக் கடையில் பார்ப்பது போல் தள்ளியே இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். சரி இனிமே சமாளித்துவிடலாம் என்று திரும்பின போது அது கண்ணில் பட்டது. அழகான எலக்ட்ரானிக் கிடார். வர்ஷா ரொம்ப நாளாக டி.வி.யில் பார்த்துவிட்டு கேட்டுக் கொண்டிருந்தாள். மிக நன்றாக் இருந்தது. வாங்கிவிடலாம், சலுகையும் வீணாகப் போகாது, குழந்தையும் மிகவும் சந்தோஷப் படுவாள். விலையைப் பார்த்தேன். முந்தின காரைவிட ஐந்து பவுண்டுகள் கூட. போனால் போகிறது.

வர்ஷாவிடம் காண்பிக்க ஓட்டமும் நடையுமாய் வீட்டிற்கு விரைந்தேன்.

வர்ஷா சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தாள். கிடாரைத் தொடாமல் சந்தோஷத்தில் எனக்கும் அவள் அம்மாவிற்கும் முத்தமாரிப் பொழிந்தாள். நன்றி சொல்லி மாளவில்லை.

இரண்டு நாட்கள் தூங்கும் போதும் பக்கத்தில் வைத்துக்கொண்டாள். மூன்றாம் நாள் டி.வி.யில் அந்த விளம்பரம் வந்த போது கையைப் பிடித்துக் கூட்டிக்கொண்டு போய் காண்பித்தாள்.

"டாடி நீங்க வாங்கிக் குடுத்த கிடார்"

"ஆமாண்டா செல்லம்.."

"டாடி அதுகூட வெச்சிண்டிருக்கிற மைக் செட்டும் வேணும் டாடி..."

"வாங்கித் தந்துட்டாப் போச்சு..உனக்கில்லாமலயா..."

Wednesday, June 02, 2004

இரண்டு மனம் வேண்டும்...

for picture version of this post click here
டுபுக்கு ஆரம்பித்தது ஆங்கிலம் மற்றும் தமிழ் பதிவுகளைப் போட. தமிழ் பதிவுகள் மட்டுமே இருந்தால் தான் தமிழ் வட்டத்தில் ஆட்டத்துக்கு சேர்த்துக்கொள்வார்கள் போல என்று தோன்றிய காரணத்தால் காசா பணமா...தமிழ் டுபுக்கு ஆரம்பித்தேன். ஒரே ரீல் பொட்டியை ரெண்டு தியேட்டரில் ஓட்டுவது மாதிரி (கிராமத்தில் இருந்திருந்தால் இது புரியும்) ஆங்கிலப் பதிவு போடுவதை அம்போவென்று விட்டு விட்டு...இப்போதெல்லாம் ஒரே தமிழ் பதிவையே ரெண்டு இடத்திலும் போட்டு ஓட்டிக் கொண்டிருக்கிறேன். நக்கீரர்கள் யாரும் கேள்வி எழுப்பாவிட்டாலும்...எனக்கே இது எதுக்கு என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. எதாவது ஒன்று போறாதா? எதற்க்கு இந்த மறு ஒளிபரப்பு?

ஒரு கடையை இழுத்து மூடுவோமென்றால் இரண்டு பக்கங்களுக்கும் நிறைய பேர் இல்லாவிட்டாலும் சொற்ப பேராவது வந்து போகிறார்கள். அவர்களுக்குச் சிரமமாக இருக்காதோ? என்ன செய்யலாம் சொல்லுங்கள். எந்தக் கடையை மூடட்டும்?

சமீபத்தில் யாரோ ஒரு பிரகஸ்பதி "தமிழ் பெண்கள் தொடை" (tamil pengal thodai) என்று ஆங்கிலத்தில் தேடி என் வலைப்பதிவுக்கு வந்திருக்கிறார். வந்து பார்த்துவிட்டு விளக்கெண்ணை குடித்த மாதிரி முழித்திருப்பார் என்பது வேறு விஷயம்.(எப்பிடி முழித்திருப்பார் என்பதை நேரில் பார்த்திருந்தால் கணஜோராய் இருந்திருக்கும்).

இவரைப் போன்றவர்கள் ஏமாறுவார்களே என்று லேசாக கரிசனம் இருந்தாலும்...முக்கியமாக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை அறிய ஆவலாய் இருக்கிறேன். யோசித்து சொல்லுங்கள்...அதற்குள் ஐஸ்வர்யாராய்க்கு கண்ணுக்கு கீழ் கருவளையம் வந்ததற்கு அனுதாபம் தெரிவித்துவிட்டு வந்துவிடுகிறேன்.


பி.கு - tamil pengal thodai என்று கூகிளில் தேடினால் என் பக்கம் வருகிறதா என்று நீங்கள் சோதித்துப் பார்த்தீர்கள் தானே? (அல்லது சோதிக்கலாம் என்று கை பரபரத்தது தானே?) :P

Tuesday, June 01, 2004

சொர்க்கமே என்றாலும்...

for picture version of this post click here

போயே போச்சு ஒரு வாரம். கிளம்பினதும் தெரியலை வந்ததும் தெரியலை. ஆனா உடம்பில் "மன்மதராசா" பாட்டுக்கு ஆடின அசதி இருக்கு. நான் சொன்ன மாதிரி வெய்யில் கொளுத்தவில்லை. அக்னிநட்சத்திரம் இந்த வருடம் ப்ளாப். எங்க ஊர் பக்கம் உண்மையிலேயே ஜிலு ஜிலுவென்று இருந்த்தது. குற்றாலம் சீசன் இந்த வருடம் வழக்கத்தைவிட சீக்கிரமாம். பஞ்சத்தில் அடிபட்டவன் போல சரவணபவன் மிக்ஸட் பரோட்டா, 14 இட்லீஸ், ஹாட் சிப்ஸ் சன்னா மஸாலா, ரோட்ரோர கொத்து பரோட்டா இன்னும் என்னவெல்லாமோ சாப்பிடவேண்டும் என்று நினைத்திருந்தேன். இறங்கின ரெண்டாம் நாள் கார்க் பிடுங்கிக் கொண்டு ஊத்து ஊத்தென்று ஊத்தியதில் நார்த்தங்காய் ஊறுகாய் தொட்டுக் கொண்டு வெறும் தயிர்சாதம் மட்டும் சாப்பிட்டுவிட்டு வந்தேன். மேற்சொன்ன காரணத்தினாலேயே ஊரில் இருந்து வலைப்பதிய முடியவில்லை என்று சப்பைக் கட்டு கட்டிக்கொள்கிறேன்.

ப்ளைட்டில் திருமலையும், முத்தக் காட்சிகள் மட்டுமே வருகிற ஒரு ஆங்கிலப் படமும் போட்டார்கள். பக்கத்து சீட்டிலிருந்த இரு பொடியர்கள் "அம்மா இதுக்கெல்லாம் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்" என்று ஆங்கிலத்தில் சமாதானம் சொல்லிக் கொண்டு பார்த்தார்கள். அதிலொரு பொடியன் அடிக்கடி என்காலில் எத்தி எழுப்பியதால் திரும்பவும் "திமிசுக் கட்டையை" பார்த்துத் தொலைய வேண்டி இருந்த்தது. மெட்ராஸிலிருந்து திருநெல்வேலி போகும் பஸ்ஸில், "இங்கிலாந்தில் எங்காத்தில் மொத்தம் ஒரே ஒரு பக்கெட் தான் வைத்திருக்கிறோம் அதிலும் தண்ணீர் பிடித்து வைக்கமாடோம்" என்று சொல்லி பக்கத்து சீட் நங்கநல்லூர் மாமாவின் வயெத்தெரிச்சலைக் கொட்டிக்கொண்டேன். காய்சலானாலும் டாக்டரைப் பார்க்க ஒரு வாரம் கழிச்சுத்தான் பார்க்கமுடியுமென்று சொன்ன பிறகு தான் ந.மாமா மேற்கொண்டு பேச ஆரம்பித்தார். அப்புறம் "ஜனா" பட புண்ணியத்தில் அடிச்சுப் போட்ட மாதிரி தூங்கினேன். அஜீத் இன்னமும் "என்னை என் வழியில் போக விடு.." என்று த்த்துப் பித்தென்று உளறிக் கொண்டிருக்கிறார் போல இருக்கு. இப்போ இப்பிடி பேசறது தான் பேஷனோ?

ஊரில் அடித்த கொஞ்ச நஞ்ச வெய்யிலும் பாழாய்ப் போகமால் அலைந்ததில் நன்றாகக் கருத்திருக்கிறேன். (இல்லாட்டாலும் இங்கே ஒன்னும் கமலஹாசன் நிறம் இல்லை). சி.டி கடைக்கு முன் பஸ் நிற்க பழைய படம் வேண்டும் என்று அலைந்ததில் இருக்கிற எல்லா படங்களையும் விட்டுவிட்டு தாடிக்கார மாமா படம் போட்டிருக்கிறதே...ராஜா காலத்துப் படமாயிருக்கும், அதுவும் ஜெமினி கணேசன் வேறு, நன்றாக இருக்கும் என்று அவசர அவசரமாக "சௌபாக்கியவதி" படம் வாங்கி வந்திருக்கிறேன். அப்பா அம்மாவிற்கே அந்தப் படத்தைப் பற்றி அவ்வளவு தெரியவில்லை. பார்க்கிற அன்னிக்கு இருக்கு மண்டகப் படி.

எதை எடுத்தாலும் பத்து ரூபாய் மாதிரி மெட்ராஸில் எங்கே போனாலும் இருநூறு ரூபாய் தான் என்று மெட்ராஸ் ஏற்போர்ட்டில் ஏ.சி.வேன் சர்வீஸ் வந்திருக்கிறது. ரொம்ப நல்ல விஷயம். பெட்டியெல்லாம் அவர்களே வாங்கிக் கொண்டு ராஜ உபசாரம் செய்கிறார்கள். அந்தக் கால ஜமீன் மாதிரி மாதிரி எட்டுப் பேர் போகக் கூடிய வண்டியில் ஒரு ஆளாக போவதற்குத் தான் கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது. ஆனால் ரொம்ப நல்ல சர்வீஸ். அடுத்த தரம் ட்ரை பண்ணிப் பாருங்க.

வரும்போது ப்ளைட்டில் பாய்ஸ் போட்டார்கள். ஒரு சேஞ்சுக்கு ஏர்ஹோஸ்டஸைப் பார்ப்பதைவிட்டு விட்டு படத்தைப் பார்ப்போமே என்று பார்த்து வைத்தேன்.